Powered By Blogger

5/25/09

நான் ரசித்த கவிதைகள்: காதல் யுத்தம்

* உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
* உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
* உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
* மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
* மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
* ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
* ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!
- பிரவீன் குமார் செ
http://www.cpraveen.com/suvadugal/love-war-tamil-poem/

5/4/09

முத்தம்


முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

சாயாமல் நடக்கிறேன்

துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.
சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,
என் தேடல் தொடங்குகிறது.

அம்மா வருகிறாள்.
அவளுக்கே இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.

மரண விளையாட்டு

குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!

*

நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.

*

அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்

*

நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.

*

நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்து!


உன் பிறந்தநாளன்று மட்டும்,
என் டைரி வெறுமையாய் இருப்பது பார்த்து கோபிக்கிறாய்.
அது டைரியில் குறிக்க வேண்டிய நாளில்லையடி
என் உயிரில் பொறிக்க வேண்டிய நாள்!

நான் நாத்திகனா?

நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.

நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.

கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை(sms)
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.

நம் பிரிவுக்குப் பிறகு
பல முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை,பகல் கனவில்..!

நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?